புரதச்சத்தை எப்படிப் பெறலாம்! சைவம் vs அசைவம்

Loading...

புரதச்சத்தை எப்படிப் பெறலாம்! சைவம் vs அசைவம்

உடலின் அன்றாட இயக்கத்துக்கு, தசைகளின் பராமரிப்பு, வளர்ச்சி, உருவாக்கத்துக்கு புரதச்சத்து மிக மிக அவசியம். ஆனால், சைவ உணவு சாப்பிடும் பலரின் மனதில் உள்ள கேள்வி, அசைவம் சாப்பிடுபவர்கள் போல, உடலுக்குத் தேவையான புரதம் சைவ உணவில் உள்ளதா என்பதுதான். உடலுக்குத் தேவையான 22 அமினோ அமிலங்கள் சேர்ந்த கலவையைத்தான் புரதச்சத்து என்கிறோம். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம். சைவம் மற்றும் அசைவ உணவுகளில் புரதச்சத்து நிறைவாக உள்ளது. அசைவம் மூலமாகக் கிடைக்கும் புரதத்துக்கு இணையாக, புரதம் நிறைந்த சைவ உணவுகளும் உள்ளன.

புரதம் நிறைந்த சைவ உணவுகள்
பால்
ஒரு கிளாஸ் பாலில் 3.4 கிராம் புரதம் உள்ளது. பாலில் உள்ள புரதத்துக்கு மாற்றாக எந்தவொரு உணவும் இல்லை.பால், சோயா ஆகியவற்றில் வே புரதம் (Whey protein) எனப்படும் சுத்தமான புரதம் உள்ளது. இதில், புரதத்தின் 22 அமினோ அமிலங்களும் உள்ளன.
லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உடைய குழந்தைகளுக்கு லாக்டோஸ் முற்றிலும் நீக்கப்பட்ட பால் கொடுக்கலாம்.
சோயா பீன்ஸ்
100 கிராம் சோயாவில் 36 கிராம் புரதம் உள்ளது. சோயாவை சீரான இடைவெளி விட்டு, சமையலில் சேர்த்து வரலாம். புரதச்சத்து குறைபாடுள்ளவர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு, அதிகப் புரதம் தேவைப்படும். இவர்களுக்கு சோயா பால், சோயா பீன்ஸ், சோயா சீஸ் கொடுக்கலாம்.
அரிசி சாதம் மற்றும் பருப்பு
கைக்குத்தல் அரிசி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, முளைக்கட்டிய பயறு போன்றவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
100 கிராம் பருப்பில் 6 கிராம் புரதம், ஒரு கப் சாதத்தில் 4.2 கிராம் புரதம், ஒரு கப் சுண்டலில் 15 கிராம் புரதம் உள்ளது.
முளைக்கட்டிய பயறுகளை, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், தசைகள் வலிமையாகும்.
நட்ஸ்
பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளில் சராசரியாக 20 கிராம் புரதம் உள்ளது.பாதாமை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம். மற்றவற்றை அப்படியே சாப்பிடலாம்.
புரதம் நிறைந்த அசைவ உணவுகள்
சிக்கன், மீன், மட்டன்
சிக்கன், மட்டன் மற்றும் கடல் உணவுகளில் புரதம் அதிகம். 100 கிராம் கோழி இறைச்சியில், 27 கிராம் புரதம் உள்ளது.
ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்படாத நாட்டுக்கோழி இறைச்சியை, நீராவியில் வேகவைத்து, வாரம் 300 – 500 கிராம் அளவுக்கு சாப்பிடுவது நல்லது. அசைவ உணவுகளை சரியான அளவில் உட்கொள்வதால், தசை வலிமைக்கும் வளர்ச்சிக்கும் உதவும்.
முட்டை
100 கிராம் முட்டையில் 13 கிராம் புரதம் இருக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்கள், கடினமான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முட்டை சாப்பிடலாம்.
முட்டையின் மஞ்சள் கருவில் புரதம் குறைவாகவும், கொழுப்பு அதிகமாகவும் உள்ளது. வெள்ளைப் பகுதியில் கொழுப்பு குறைவாகவும், புரதம் அதிகமாகவும் உள்ளது. ஆகவே, புரதம் மட்டும் எடுத்துக் கொள்ள, மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் தினமும் சாப்பிடலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் தேவை?
ஒருவரின் எடை மற்றும் உடல் அமைப்பைப் பொறுத்து புரதத் தேவை அளவு நிர்ணயிக்கப்படுகிறது. சராசரியாக, ஒரு கிலோ எடைக்கு 0.8 முதல் ஒரு கிராம் வரை புரதம் தேவைப்படும். ஒருவர் 70 கிலோ எடை இருந்தால், அவருக்கு ஒரு நாளைக்கு 67 முதல் 70 கிராம் புரதம் தேவைப்படலாம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர் புரதத்தை எடுத்துக்கொண்டாலே போதுமானது.
சைவம் சாப்பிடும், 70 கிலோ எடையுள்ள நபர் தினமும், பயறு வகைகள், சோயா, பால், பருப்பு வகைகள் எடுத்துக்கொள்வதன் மூலம், 70 கிராம் அளவுக்குப் புரதச்சத்தைப் பெறலாம்.

Loading...
Rates : 0